Tamouls aux Antilles Françaises

பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளில் தமிழர்கள்

பிரெஞ்சு மேற்கிந்தியத்தீவுகளில் தமிழ்-தமிழர்

முனைவர் சாம் விஜய்

மேனாள் பேராசிரியர்

பிரான்சு.                                                        

மேற்கிந்தியத்தீவுகள் என்றாலே மட்டைப்பந்து (cricket) ஆடும் கருப்பரினத்தைச்  (ஆப்பிரிக்கர்கள்) சேர்ந்த விளையாட்டு வீரர்கள்தான் நம் நினைவுக்கு வருவர். ஆனால் மேற்கிந்தியத்தீவுகளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஏறத்தாழ 175 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் என்பது நம்முள் பலரும் அறியாத புதிய செய்தியாகும்.  

மேற்கிந்தியத்தீவுத் தமிழர்

பிரான்சு நாட்டுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டிலிருந்து இன்றும் 20,000 கிலோமீட்டருக்கப்பால் உள்ள  மர்த்தினிக் மற்றும் குவாதலூப் போன்ற தீவுகள் உள்ளன. இங்கு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய சென்ற தமிழர்களின் வம்சாவழியினர் இன்று பிரெஞ்சுக் குடியுரிமையுடன் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்க்கைச் சூழ்நிலையால், தமிழ்மொழியை மறந்தாலும் இன்றளவும் தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் வாழ்ந்து வருகின்றனர். இதனை 1967 ஆம் ஆண்டில் அங்கு சென்று களஆராய்ச்சி செய்து  தமிழுலகத்துக்கு அறிவித்தவர் தமிழ்த்தூதுவர் தனிநாயக அடிகளார் ஆவார்.

பிரான்சு நாட்டின் தமிழ்மக்களின் தொகை பலவிதமான வரலாற்றுத் தகவல்களாலும் மற்றும் தமிழ் அமைப்புகளாலும் கணக்கிடப்படுகிறது. பிரான்சு நாட்டில் மொழி, இனம், பூர்வீகம் மதம் போன்ற அடிப்படையில் மக்கள் தொகையை தொகுப்பதும் கணினியில் சேமித்துவைப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதை பிரான்சு அரசு கூட செய்யமுடியாது. காரணம், இரண்டாவது உலகப்போரில் யூதர்களை தனியாகப் பிரித்து பட்டியலிட்டதால் இட்லரால் இனப்படுகொலை செய்வது சாத்தியமானது. எனவே வரலாற்றுத் தகவல்களைக் கொண்டு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் வாழும் தமிழர்கள் குறித்த தகவல்களைத் தொகுக்கலாம். 

தற்பொழுது பிரான்சு நாட்டுத்தமிழர்கள்,  பிரான்சுக்குத் சொந்தமான நான்கு இடங்களில் பெருவாரியாக வாழ்கிறார்கள். அவையாவன;

1.  ஐரோப்பாவில் உள்ள பிரான்சு (France)                      2,50,000

2.  இந்துமாகடலில் உள்ள இரேயூனியன் தீவு        3,00,000

3.  மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள குவாதலூப்            45,000

4.  மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள மர்த்தினிக்             15,000

இதில் பிரான்ஸ் தவிர மற்ற மூன்று தீவுகளிலும் வாழும் தமிழர்களிடத்தில் தமிழ் மொழிப் புழக்கம் என்பது அருகி விட்டது. ரெயூனியன் தீவில் தமிழ் பேசும் சிலரை இன்றும் காணமுடியும். ஆனால், மேற்கிந்தியத் தீவுகளான குவாதலூப் மற்றும் மர்த்தினிக் ஆகிய இடங்களில்  தமிழ் வழக்கொழிந்த மொழியாக ஆகிவிட்டது.

மேற்கிந்தியத்தீவுகளில் தமிழர் குடியேற்றங்கள்

பீரான்சிய மேற்கிந்தியத்தீவுகளான மர்த்தினிக் மற்றும் குவாதலூப் போன்ற தீவுகளில் இருந்த கரும்புத்தோட்டங்களில் அடிமைகளாகப் பணிசெய்த ஆப்பிரிக்க இன மக்கள் 1848-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட  அடிமை ஒழிப்புச் சட்டத்தினால் விடுதலை பெற்றனர். அதனால், அடிமைகளாக இனி வாழமாட்டோம் என்று மறுத்து, கரும்புத்தோட்டங்களிருந்து வெளியேறி நகர்ப் புறங்களுக்குச் சென்று விட்டனர்.

இதனால், கரும்புத்தோட்டங்களில் தொழிலாளிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு கரும்பு விவசாயத் தொழில் நலிவடைந்து பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால், புதிய தொழிலாளர்களை மேற்கிந்தியத்தீவுகளுக்கு அழைத்து வருமாறு, கரும்புத்தோட்ட உரிமையாளர்கள் பிரான்சு அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். பிரான்சு நாட்டுக்குத் தென்னிந்தியாவில் காலனிகள் இருந்ததாலும், குறிப்பாகத் தமிழர்கள், கரும்பு போன்ற விவசாயத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தமையாலும், அவர்களைப் பிரெஞ்சு காலனித்தீவுகளான மர்த்தினிக் மற்றும் குவாதலூப் தீவுகளுக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.

இவ்வாறு ஒப்பந்தக்கூலிகளாக ஆயிரக்கணக்கானத் தமிழர்கள், கப்பல்கள் மூலம் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பாலிலிருந்த தீவுகளுக்கு ஏறத்தாழ மூன்று மாதகாலம் தொடர்ச்சியாகப் பயணித்தனர். இம்மூன்று மாதகாலக் கொடிய கடற்பயணத்தில் பலர் கடல்நோய் வாய்ப்பட்டனர். கரை சென்று சேர்வதற்குள் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். தொற்றுநோய் கண்டவர்களை உயிருடன் கடலில் தூக்கி எறிந்தனர். மேலும் புயல்களால் பல கப்பல்கள் பயணிகளுடன் கடலில் மூழ்கின. கரை சேர்ந்தவர்களோ புதிய தீவில் சொல்லவியலாத துன்பங்கள பலவற்றைச் சந்தித்தனர்.

06.05.1854 அன்று ஒரேலி (Aurelie) என்ற கப்பல், இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து 317 தமிழர்களை ஏற்றி வந்த கப்பல் மர்த்தினிக் தீவின் முக்கியத் துறைமுகமான செயிண்ட் பியர் (Saint Pierre)  என்ற ஊரை வந்தடைந்தது. இதே கப்பல் அதே ஆண்டு திசம்பர் மாதம் 24 தேதியன்று 344 ஒப்பந்தக்கூலிகளுடன் குவாதலூப் என்ற தீவில் வந்தடைந்தது. இதில் கல்கத்தாவிலிருந்து வந்த சில கூலிகளும் அடங்குவர்.  இவ்வாறாக 1854 முதல் 1883 வரை குவாதலூப்பில் 42,326 பேர்களும், மர்த்தினிக்கில் 25,509 பேர்களும் இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாகக் குடியேறினர்.

தமிழர்களின் இழப்பும் உழைப்பும்

மர்த்தினிக் மற்றும் குவாதலூப் தீவுகளில் குடியேற்றப்பட்ட தமிழர்கள் பட்ட துயரங்களை வெறும் சொற்களால் வருணிக்க இயலாது. அவர்கள் இழந்த முதல் விடயம், தமிழ் உணவுகள் ஆகும்.  இரண்டாவதாக, அங்கிருந்த ஆப்ரிக்கர்களும், பிரெஞ்சியர்களும் பேசிய கிரியோல் மற்றும் பிரெஞ்சு மொழிகள் தமிழர்களுக்குப் புரியவில்லை. மூன்றாவதாக, அவர்களுடைய சொந்த சமயத்தைப் பின்பற்றுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கப் பட்டனர். மேலும் தமிழ்மொழிக் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்டது. தோட்ட முதலாளிகளின் கொடுமைகளாலும் ஆப்பிரிக்கர்களின் பொறாமைக் குணத்தாலும் தமிழர்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டனர். இதனால்,  தமிழர்கள் தம் தாய்மொழியை இழந்தனர். அவர்களின் பண்பாட்டு மரபுகள் மெல்ல அடையாளம் இழக்கத் தொடங்கின.

வாழ்வின் அடிப்படை உரிமைகளை இழந்த போதும், சற்றும் சளைக்காமல் தாங்கள் குடியேறிய நாட்டின் வளத்தையே நோக்காகக் கொண்டு அங்கிருந்த கரும்புவயல்களில் அல்லும்பகலும் கடுமையாக உழைத்தனர்.

பொங்கல் விழா உரிமை

தமிழர்களின் கடுமையான உழைப்பு, அவர்களுக்குப் பிரான்சியர்களிடம்  நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. கடுமையான உழைப்புக்கு மாற்றாக, சில  சலுகைகளை அளிக்க இத்தீவுகளின் நிர்வாகங்கள் ஒப்புதல் அளித்தன. முக்கியமாக, தமிழர் திருநாள் புத்தாண்டாகிய பொங்கல் திருநாளை, அவர்கள் வாழ்ந்த கரும்புத் தோட்டக்குடியிருப்புகளிலேயே கொண்டாட அனுமதி கிடைத்தது.

பொங்கல் விழாவை கொண்டாட நான்கு நாட்கள் விடுமுறை அளிக்க பிரான்சு நாடு தொழிலாளர் சட்டம் ஒன்றையும் இயற்றியது. இந்த சட்டம் பற்றி எல்லா கூலி ஒப்பந்தப் பத்திரங்களிலும் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் அரசு வலியுறுத்தியது.  

மர்த்தினிக் தீவில், 1855- ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட  பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை  « மர்த்தினிக் மானிட்டர் » என்ற பிரெஞ்சு பத்திரிகையில் ஒரு பிரெஞ்சு தோட்ட முதலாளி எழுதிய கட்டுரையைத் தனிநாயகம் அடிகளார் அங்கு சென்ற போது தேடிக் கண்டெடுத்தார். அதை ஆவணப்படுத்தியதோடு, அப்போது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள் இரண்டு தலைமுறைக்குப் பிறகு, தற்போது (அதாவது 1968-ஆம் ஆண்டில்) இரண்டு தீவுகளிலுமே கொண்டாடப்படவில்லை என்பதைப் பதிவு செய்தார்.

வழக்கொழிந்த தமிழ்

150 ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேறிய முதல் இரண்டு தலைமுறையினர் தமிழ் பேசினர். ஆனால்,  என்றும் தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர் என்றும் தனிநாயக அடிகள் ஆவணங்களை  ஆராய்ந்து கூறியுள்ளார். தனிநாயகம் அடிகளார் 1967 ஆம் ஆண்டில் இத்தீவுகளுக்குச் சென்றார். அன்றைக்கு ஏறத்தாழ 17 தமிழர்கள், தமிழ்மொழியைச் சிறப்பாகப் பேசினார்கள் என்ற தகவலை, 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் அவர் வாசித்த,  ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டார். .

ஆனால், மேற்கிந்தியத்தீவுகளில் தமிழ்மொழி இன்று முற்றிலும் பேச்சு வழக்கின்றி அழிந்துவிட்டது. ஓரிருவர் மட்டும் சில சொற்களைப் பேசுகின்றனர்.  அதுவும் குலதெய்வ வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் மட்டுமே என்பதனைக் கண்கூடாகக் காணமுடியும்.  எண்பது வயதைக் கடந்த மூத்தோர்களின் பெயர்களில் தமிழ் அடையாளம் பொதிந்திருப்பதை இன்றும் காணவியலும். எடுத்துக்காட்டாக, ”மர்செல் சூலினா முத்துசாமி” போன்ற பெயரைக் குறிப்பிடலாம்.

நிறைவாக

நூற்றாண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்டு மறக்கப்பட்ட பொங்கல் விழாவை மீண்டும் கொண்டாட அண்மைக்காலமாக குவாதலூப்பில் உள்ள மொழிக்கல்வி நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழரோடு மணவுறவின் மூலம் ஒன்றிணைந்த ஆப்பிரிக்க வம்சாவழியினரின் பிள்ளைகளும் இவ்விழாக்களில் பங்கேற்றுப் பறையிசைக் கருவியை முழங்கியபடி பொங்கல் மற்றும் மாரியம்மன் விழாக்கள் கொண்டாடப்படும் சூழலை இன்று காணமுடிகிறது. பண்பாட்டை மீட்டெடுத்ததைப் போன்றே தமிழ்மொழியையும் மேற்கிந்தியத்தீவின் தமிழர்கள் மீண்டும் பிறக்கச் செய்வார்கள் என்று காலம் காத்திருக்கின்றது.

(கட்டுரை ஆசிரியரைப்பற்றி :  முனைவர் சாம் விஜய் அவர்கள் புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் பிரான்சிய இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்று பின்பு புதுவை தாகூர் கலைக்கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் சென்னை இலயோலா கல்லூரிகளில் பிரான்சிய மொழி துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், பன்னாட்டு அரசியல் மற்றும் உலக சட்டவியல் போன்ற துறைகளில் அமெரிக்காவிலும் பிரான்சு நாட்டிலும் பட்டங்கள் பயின்று,  நியூயார்க் நகரமன்றம், ஐக்கிய நாடுகள் சபை, யுனெசுகோ, பிரான்சு வெளிநாட்டுத்துறை, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளில் பணி புரிந்தவர்.  தொடர்புகொள்ள /  samvijayparis@gmail.com)